அழைப்பு
பிடிக்காத வேலை சொற்ப சம்பளம் எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்து தாக்கு பிடித்து ஒட்டி ஓட்டிவருகிறேன் , நெடுநாட்களாகவே எனது அனுபவத்திற்கும் , திறமைக்கும் ஏற்ற வேலையை தேடி வருகிறேன் கிட்டியப்பாடில்லை !!
வழக்கம் போல் ஒரு வெள்ளிக்கிழமை பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தேன் , மாலை 3 மணி வாக்கில் எனது செல் போன் சிணுங்கியது நானோ யாரோ இன்சூரன்ஸ் , பர்சனல் லோன் அல்லது கிளப்மெம்பர்ஷிப்புக்குக்கான அழைப்பு என்று எண்ணி அலட்சியமாக
எடுத்தேன் ...
மறுமுனையில் நடுத்தர வயதுடைய கரகரப்பான குரலில் தன்னை சென்னையைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பாலையின் " HR - கோவின்ட் " என தன்னை அறிமுக படுத்திக்கொண்டார் !
"MR.குமரேசன் உங்கள் CV யை வேலைவாய்ப்பு தளத்திலிருந்து தரவிரக்கம் செய்தோம் , நீங்கள் எங்கள் ஆளை உதவி மேலாளர் பணிக்கு மிகவும் பொருந்தியுள்ளீர் ஆகவே இன்னும் 10 அல்லது 15 நிமிடத்தில் எங்கள் தேர்வு குழுவிடமிருந்து மீண்டும் உங்களுக்கு ஒரு அழைப்பு வரும் , அக்குழுவில் மூவர் இடம் பெறுவோம் அதில் என்னை தவிர்த்து குரூப் சேர்மன் மற்றும் ஆலை தலைவர்
உடனிருப்பர்" என கூறி இணைப்பை துண்டித்தார்
நானோ செய்வதறியாது எனது மேலாரிடம் சென்று தலையை சொரிந்து , எதை எதையோ உளறி , குழறி 30 நிமிடங்கள் கீழே சென்று வர அனுமதி பெற்றேன் .
கீழே இறங்கி ஒரு நிசப்தமான இடத்தை தேர்வு செய்து அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன் , அழைப்பும் வந்தது .. " நம் வாழ்வயே மாற்றப் போகும் திருப்புமுனை அழைப்பு " இதுதான் என திடமாக நம்பினேன் .
தேர்வு குழுவினர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சுருக்கமாகவும் , தெளிவாகவும் பதிலளித்தேன் , எல்லா வார்த்தைகளையும் நன்கு உள்வாங்கிய பிறகே பேசினேன் , பல கிடுகுக்குப்பிடி கேள்விகளுக்கு பதற்றமின்றி பதிலளித்தேன் .
இப்படியாக சுமார் 17 முதல் 20 நிமிடங்களை நீடித்த சம்பாஷணைகளின் முடிவில் மூவருமே கூட்டாக " MR.குமரேசன் , நீங்கள் நேர்முக தேர்விற்கு தேர்ந்தேடுக்கப்பட்டீர்கள் , விரைவில் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும்" என்றனர் !! மேலும் 90 சதவிகிதம் நீங்கள் தேர்வு செய்யப்பட்டது போல் தான் நீங்கள் நேரில் வருவது ஒரு சம்பிரதாயத்திற்கே , உங்களின் ஆரம்ப மாத சம்பளம் 28,000/- ( பிடித்தம் போக ) என்று கூறி என்னை திக்குமுக்காட செய்தனர் .
உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தேன் நான் , சட்டென உங்கள் UG யை எங்கு முடித்தீர்கள் என்றார் கோவின்ட் " எனது UG மற்றும் PG யை தொலைதூர கல்வி வாயிலாகவே பெற்றேன் , இதை எனது CV யிலும் தெளிவாக குறிப்பிட்டுளேன் " என்றேன் .
சாரி நா(ன்) சரியா கவனிக்கல " AS PER OUR NORMS , REGULAR GRADUATES ONLY ALLOWED TO WORK IN OUR MANAGEMENT TEAM" என்று அவசரமாக இணைப்பை துண்டித்தார் ...
மீண்டும் மேலே சென்று வழக்கமான பணியை தொடர்ந்தேன் , வந்த கண்ணீரும் சுவடே தெரியாமல் ஓடி ஒளிந்தது . மற்றொரு அழைப்பிற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
ரா.சா
No comments:
Post a Comment