Friday, 11 May 2018

ரயில் பயணத்தில்

                                                 ரயில் பயணத்தில் 


சனிக்கிழமை  மாலை 6:30 மணியை கடந்தும் முடியவில்லை எனது அலுவலக மீட்டிங் , எனது மனமோ " சென்னை எக்ஸ்பிரஸ்" ஐ  பிடிக்க தவித்து கொண்டிருந்தது ...

ஒரு வழியாக 9 மணிக்கு முடிந்தது பல அதிர் வேட்டுகளுடன்   , அதில் எனக்கு திங்கட்கிழமை காலை " எர்ணாகுளம் " சென்றே ஆஹ வேண்டும் என்ற பட்டாசு !

வேறு வழி இன்றி பெங்களூர் கெஸ்ட் ஹவுஸ்லேயே தங்கி காலை 4.30 திற்கே  எழுந்து (  ஞாயிற்று கிழமை  ! )  6 மணி ரயிலை பிடித்தேன் .. எனது ஜன்னல் ஒரே சீட்டில் அமர்ந்து பெங்களூருக்கு விடை கொடுத்து சிறிது நேரம் கழித்து சிற்றுண்டியை முடித்தேன் .

300 பாடல்கள் கொண்ட எனது மொபைல் MP3 ஐ ஆன் செய்து ஹெட் போனுடன் மெய் மறந்தேன் , ஆறே பாடல்கள் தாண்டுவதற்குள் சலிப்பு தட்டிவிட்டது ., பையில் இருந்த வார , மாத இதழ்களை புரட்டினேன் " சினிமா " பக்கங்கள் கடந்தவுடன் அசுவாரஸ்யம் ஏற்பட்டது , சரி அலுவலக செயல் திட்டம் திட்ட எத்தனித்தாலோ தலையே வெடித்தது !!

அதிசயமாய் எனக்கு தூக்கமும் வரவில்லை , ரயிலிலும் கூட்டமே இல்லை ... இருந்த சிலரும் " லாப் -டாப் " , போன் , தூக்கம் ,  என லைத்தனர் . இரெண்டே மணிநேரத்திற்குள் செய்வதறியா நிலை !!

மீதமுள்ள 9 மணி நேரத்தை நினைக்கவே கடுப்பானது .

சரியென்று  படிக்கட்டு கம்பி , கதவோரம்  நின்று  அதிவேக காற்று , வயல் வெளி , வழிபோக்கர் , உடன் வருவது போல மாய தோற்றமளிக்கும் மரங்கள் , கையசைக்கும் சுட்டிகள் , நெடியவளைவுகளில் தெரியும் முழு நீல ரயில் , வித விதமான ஓசைகள் , கடந்து செல்லும் அதிவேக ரயில்கள் என சற்று நேரம் ரசித்துவிட்டு நடக்க ஆரமித்தேன் ...

எமது பெட்டியில் இருந்து இறுதி பெட்டி வரை நடக்க ஆரமித்தேன் ... கிட்ட தட்ட ஒரு கிலோமீட்டர் .., வழியில் பல பல வியாபாரிகள் , பல காலாச்சார பிரயாணிகள் , திருநங்கைகள் , சில மாணவ பட்டாளம் , ராணுவவீரர்கள் , வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் , என பலரையும் கண்டு எமது இருக்கைக்கு மீண்டும் திடும்புகையில் 1 மணிநேரத்தை ஒழித்துக்கட்டியிருந்தேன் .

சிறிது நேரம் கழித்து எனதருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் வந்து அமர்ந்தார் ., " ப்ளீஸ் கிவ் யுவர் விண்டோ சீட் " என்றார் , நானும் நகர்ந்தேன் .

மிகவும் குஷியுடன் ஜன்னலை ரசித்தார் , சிறு பிள்ளை போல சீட்டி அடித்தார் .. கூலிங் கிளாஸ் , வெள்ளை தொப்பி , பெங்களூரு  ஸ்வட்டர் , ஜீன்ஸ் பாண்ட் , என ஜரூராக இருந்தார். பவுடர் மட்டும் சற்று அதீதம் .

என்னிடம் பேச்சு கொடுத்தார் , " ஆண்டவனாக அனுப்பிய டைம் பாஸ் " என எண்ணிக்கொண்டேன் . தான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி என்றும் , சென்ற வாரம் முதல் தென் இந்திய சுற்று பயணம் மேற்கொள்வதாகவும் , தான் சொந்த பணத்தில் சுதந்திரமாய் திரிவதாகவும் கூறினார் , இடையே தன்மகனிடம் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் நலமறிவித்தும் , நலம் விசாரித்தும் பேசி முடித்தார்  .

நாங்கள் இருவரும் குடும்பம் , அரசியல் , வேலை , பொருளாதாரம் , போன்ற பல விஷயங்களை பேசி தள்ளினோம் , அந்த ஸ்வாரசியத்தில்  திருப்பூர் , பாலக்காடு கடந்ததே தெரியவில்லை . சில நேரத்திலேயே அவர் இறங்க வேண்டிய " திருச்சூர் " வந்து விட்டது ..புன்னகையுடன் விடை பெற்றார் .

அவர் இறங்கியவுடன் வாழ்ந்தா இவர மாதிரி வாழனும் , 80 வயசுலயும் எவனையும் நம்பாம சொந்த கால்ல நிக்கணும் , கவர்மெண்ட் ஜாப் ட்ரை பண்ணனும் , சேமிக்கணும் , என்ன செய்யலாம் , என்ன என்ன செஞ்சுருக்கலாம் , வாழ்கை தடத்தையே மாத்தணும் , இப்படி பற்பல  எண்ணங்கள் தோன்றி சிந்தையின் உச்சத்தை அடையும்போது " எர்ணாகுளம் " என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது .


                                 



                                ___  ராம்பிரகாஷ் சாமிநாதன் .











No comments:

Post a Comment