பணி !
சுதாரித்து திரும்புவதற்குள் மற்றொரு கல் நெற்றியை பதம் பார்த்தது .. லேசாக ரத்தமும் எட்டிப்பார்க்க சட்டென வேகமெடுத்தேன் .
வீடு வந்து சேரும்போது இருதய துடிப்பு வெளியே கேட்டது ! முகத்தை துடைத்து கொண்டு சாதாரணமாக உள்ளே நுழைந்தேன் சுசீலா சிடுசிடுத்தாள் ... ராகுல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
சுசியை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து உறங்க சென்றேன் நள்ளிரவை கடந்து நெடு நேரமாகியும் உறங்கமுடியவில்லை . வீட்டை சுற்றி வந்துகொண்டிருந்தேன் .. தனி வீடு காற்றோட்டம் புறநகர் ராகுலின் ப்ரீ ஸ்கூல் போன்ற பல வசதிகள் . உள்ளே நகர்கையில் ஜன்னல் மீது கல் வீச எத்தனித்த இரு இளைஞர்களை மடக்கி பிடித்து அடியை போட்டு விரட்டி விட்டேன் .
மீண்டும் சுசி பொறிய ஆரமித்தாள் , " தெரிஞ்சுதானம்மா போலீஸ்காரன கட்டுன ? ..." என்று போலி கோபத்தை வெளிக்காட்டி சமாளித்தேன் .
மறுநாள் ஸ்டேஷனுக்கு நுழைந்தது முதல் ஒரே இலவச ஆலோசனைகள் .. "தனா" கிட்ட வம்பு வேணாம் தனா பயங்கர தாதா , முரட்டு ஆளு , ரவுடி , அப்புடி இப்புடி என்று .... சற்று நேரம் கழித்து ரைட்டர் மகேஷ் வந்து " சார் நா வேணா தனா அண்ணன் கிட்ட பேசி காம்ப்ரமைஸ் பண்ணி விடவா " என்கையில் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.. " சல்யூட்டை விடு ப்ரவீன் நிறைய சினிமா பாப்பியா ? கொஞ்சமாச்சும் புரிஞ்சு நட யா " என்று நக்கலடித்து சென்றார் .
சற்று நேரத்தில் எஸ்.பி வாக்கியில் அழைத்து " கலக்குறீங்க மிஸ்டர் பிரவீன் , எதுக்கும் பயப்படாதீங்க , உங்கள மாதிரி ஒரு சில ஆளுங்க இருக்கிறதாலதான் நம்மள இன்னும் மதிக்கறாங்க , எதுவாக இருந்தாலும் என்னோட பர்சனல் நம்பர்லயே கூப்பிடுங்க , ஆல் தி பெஸ்ட் " என்றார் .
சற்று உற்சாகத்துடன் வீடு திரும்பினேன் வழியில் எந்த சில்மிஷமும் இல்லை , அடியபோட்டாதான் அசறுறானுங்க என்று நினைத்தபடி உள்ள நுழைந்தால் ... டிவி , பீரோ , ஜன்னல் கண்ணாடிகள் , என யாவையும் சுக்குநூறாகியிருந்தது ... ராகுலின் முகம் பயத்தில் வெளிறிவிட்டது .. சுசி பேசவே இல்லை, அவள் கண்களில் கோபக்கனல் !
இரெண்டே மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்டவர்களை பிடித்து லாடம் காட்டினேன் .. மொபைலை எடுத்து "யோவ் காலேஜ் பசங்களுக்கு கோகைன் சப்ளை பண்ணும்போது உன் மவன கையும்களவுமா பிடிச்சிருக்கேன் , எதாருந்தாலும் கோர்ட்ல பாத்துகோ , பேடி தனமா ஒளிஞ்சிருந்து அடிக்கிற பாஸ்***ட் " என்றேன் தனாவிடம் .
தனவையும் உள்ளே தள்ள ஆதாரங்களை திரட்டினேன் அப்போது " மிஸ்டர் பிரவீன் என்ன ட்ரான்ஸபெர் பண்ணிட்டாங்க , டேக் கேர் பீ அலர்ட் " என்று கூறி வைத்தார் எஸ்.பி ! மீண்டும் செல்லில் அழைப்பு மனி " ராகுலை காணும்முங்க என்று கேவி அழுதாள் சுசி ! " துடித்து போனேன் ...
நேராக தானாவின் வீட்டிற்கே சென்றேன் , மர நாற்காலியில் கம்பீரமாக உட்கார்திருந்தான் . , என்னுடைய ரிவோல்வர்ரை எடுத்து பட்.. பட்.. என மூன்று குண்டுகளை அவனது நெற்றியில் ரத்தம் தெறிக்க பாய்ச்சினேன் .....
அப்படி கூற எனக்கும் ஆசை தான் ஆனால் அன்று அவன் காலில் விழுந்து கதறி அழுது ராகுலை மீட்டுவந்தேன் ..!
போலீஸ் வேலை, ஊர்,நேர்மை , என எல்லாவற்றையும் விட்டு தள்ளி வெகு தூரம் வந்துவிட்டேன் .
தற்பொழுது நான் ஒரு தனியார் மருத்துவமனையின் "செக்யூரிட்டி மேனேஜர்" , ராகுல் செகண்ட் ஸ்டாண்டர்ட் , சுசிலா சோ ஹாப்பி " .
'
No comments:
Post a Comment