Monday, 3 June 2019

மறுபடியும்

                                           
                                                   மறுபடியும் 



                           ஒரு சில நாட்களாகவே சலிப்பு ...

         ஸ்கூலுக்கு போகுற ( சில ) பிள்ளைகளை போல , கடனே என்று அலுவலகத்துக்கு சென்று வந்தேன்.

   தற்செயலாக ஈ -மெயில் பார்க்கையில் , நாளைய மறுநாள் "திருச்சி"யில் ஒரு நேர்முகத்தேர்வு .

  தம்பியிடம் கூறினேன் " அவனவன் திருச்சி , மதுரை , திருநெவேலிலேந்துலாம் பொட்டி படுக்கையோட மெட்ராஸுக்கு வந்து அடைக்கலம்மாயிட்டான் , நீ என்னடா ! , அண்ணியையும்  கூட்டிட்டு போறியா ? ஓஹ் , இன்டெர்வியூவாக்கும்"

 என்று அவனுக்குகே   உரிய குசும்பில் கேட்டு , ரயில் டிக்கெட் புக் செய்து கொடுத்தான்.

 மறுநாள் (வியாழக்கிழமை) அலுவலகம் சென்று , வெள்ளிக்கிழமைக்கு விடுப்பு தெரிவித்து , சனிக்கிழமையும் பிரயாண களைப்பை கரணம் காட்டி மட்டம் போட்டு விடலாம் என்று எண்ணிய போதே குதூகலமாய் இருந்தது .

 ஒரு வழியாக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு , அப்பா,அம்மா,மனைவி , தம்பி என அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தாம்பரம் சென்று "மலைக்கோட்டை விரைவு" வண்டியைப் பிடித்தேன்.

  அதிகாலை 4 மணிக்கெல்லாம் திருச்சி ஜங்ஷனை அடைந்தேன் , அங்கேயே ஏசி வைட்டிங் ஹாலில் சகல கடன்களையும் முடித்துவிட்டு குளித்தேன் .

 மணி 6 ஐ கூட நெருங்கவில்லை ! காபியை குடித்துவிட்டு "உச்சி பிள்ளையாரை" பார்த்துவிட தீர்மானித்தேன்.

ஆலயத்தை அடைந்தவுடனே எண்ணற்ற மலரும் நினைவுகள் ...


  • சித்தப்பா மகனுடன் படிக்கட்டில் சறுக்கியே இறங்குவது.
  • ஜான்ஸ் ஐஸ் கிரீமை அளவில்லாமல் தின்றது .
  • சித்தியின் பட்ஜெட்டைத்  தாண்டி பட்டாசு வாங்கி வெடித்தது.
  • பரோட்டா கடையில் சண்டை போட்டது.
  • மெயின் கார்ட் கேட்டில் எலெக்ட்ரானிக் குப்பைகளை வாங்கி வீணடித்தது.
  • தெப்பக்குளத்தில் போட்டிங் சென்றது...


காசை பற்றிய கவலையே இல்லாமல் சிட்டாய் பறந்த.. பரந்த நாட்கள் !

  கோவில் படிக்கட்டுகளை பார்த்தவுடனே தம்பியுடன் குடு குடு வென ஒரேமூச்சில் ஏரியாதைப் போல , தற்போது ஏற முடியுமா என்ற என்னம் தோன்ற...

    தட தட வென்று ஓடி ஏறிவிட்டேன் , பயங்கரமாய் மூச்சு வாங்கினேன் !


 பரவால்ல முப்பதை நெருங்கபோறோம் இன்னும் "யூத்புல்" லா தான் இருக்கோம் என்ற குஷியுடன்.

   " தாயுமானவரையும் - உமையம்மையையும்" கண் குளிர தரிசித்தேன் , இவ்வளவு பெரிய லிங்கமா , என்னுடைய நினைவிலேயே இல்லை .

  சொற்ப ஜன நடமாட்டம் தான் இருந்தது .

   அங்கு ஒருவர் மனமுருகி சிவனை துதித்துக்கொண்டிருந்தார் , இடைஇடையே "திரிசிரண் மலை" என்று கூறிவந்தார்.

 ஒரு வேலை அதுதான் மருவி திருச்சிராப்பள்ளி ஆனதோ என்று யூகித்துக்கொண்டேன்.

  பிறகு உச்சம் ஏறி "உச்சி பிள்ளையாரை"க்கண்டேன் !

" விபீஷணரு , ரங்கநாதரை கீழ வெச்ச பையன துரத்திவந்து ... மலை மேல ஏறி உட்காத்தவன் தலையில குட்டினாரு, அந்த பையன் தான் இந்த புள்ளயாரு" என்று அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன்.

  மலை உச்சில் இருந்து "ஸ்ரீரங்க கோபுரம்" , காவிரிப் பாலம் , சர்ச் , மசூதி , ஜவுளி கடை , என ஒட்டு மொத்த நகரத்தையும் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி கண்டுகளித்தேன்.


  எனது விலையுயர்ந்த செல் போன் கேமராவில் , நான் கண்ட காட்சிகளை படமெடுக்க முயன்றேன் ... முடியவேயில்லை !

   கடவுள் கொடுத்த கண்களின் அருமை மிக நன்றாக புரிந்தது.

  பசி வயிற்றைக்கில்ல , கீழே இறங்கி டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டேன் .
 10 மணிக்கு பதினைந்து நிமிடம் முன்னாலேயே சென்று உட்கார்ந்துவிட்டேன்.

   உடன் அமர்ந்திருந்த பலர் , எப்படியாவது இந்த வேலையை பெற்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் காட்சியளித்தனர்.

  10.30 வாக்கில் என்னை அழைத்து சில கேள்விகளைத்தொடுத்தனர் , நானும் முறையாக பதிலளித்தேன். வரும் புதன் கிழமை வாக்கில் முடிவை தெரிவிப்போம் என்றனர்.

  11.15 க்கு எல்லாம் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

  ஒன்றாம் எண் பஸ்ஐ பார்த்தவுடன் "திருவானைக்கா" நினைவுகள் சுண்டி இழுக்க ஓடோடி சென்று இடம் பிடித்தேன்.


  • பாட்டியுடைய பாசத்தில் ஜோராய் திரிந்தது  .
  • வேட்டி கட்ட ஆரமித்த புதிதில் , அது காற்றில் பறந்து கதிகலங்க வைத்தது ..
  •   பந்தடித்து ஓட்டை உடைத்தது.
  • சுட்டி விகடனுக்கு கொத்துக்கொத்தாய் தபால் போட்டது.
  • கலர் குருவி வாங்க காசு சேத்தது.
    இப்படி நினைக்கையிலே நிறுத்தமே வந்துவிட்டது!

     நான் நுழையும் நேரம் அழகிய  "அகிலா" யானை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
அர்ச்சகர் புடவை , கிரீடம் அணிந்து "கோ" பூஜை செய்து முடித்தார்.  

   ஆனைக்கா அண்ணலை அருகே சென்று பார்த்தேன் , அகிலாண்டேஸ்வரியை ஆனந்தமாய் கண்டுகளித்தேன்! 

   மதியம் கொத்தவரங்காய் வற்றலுடன் சாப்பிட்டுவிட்டு நடக்க ஆரமித்தேன்..

  ஆம் ரங்கநாதரை சந்திக்க ! ஆனந்த நினைவலைகள் என்னை முழுவதும் ஆட்கொண்டுவிட்டதால் , வெயிலோ ,அலுப்போ அறவே இல்லை.

 கூட்டத்தில் நின்று  நிதானமாய் ரங்கநாதர் , தாயார் , ராமானுஜர் ,முதலிய யாவரையும் தரிசித்துவிட்டு 153 ஏக்கர் கோவிலை முடிந்த முட்டும் சுற்றினேன்.

 236 அடி ராஜ கோபுரத்தை கண்டுகொண்டே  இருந்தேன் ... 

அதே கடைகள் , நறுமலர்கள் , மாவுமில் சத்தம் , காபித்தூள் நறுமணம் , பஜ்ஜி  ! பிறகு நாங்கள் சிறுவயதில் ஓடித்திரிந்த பூங்காவில் , சுண்டலுடன் உட்கார்ந்து இளைப்பாறினேன்.

  " அடேய் குண்டா ! இங்க என்ன பன்ற ? , எத்தனை வருஷமாச்சு அதே நீலச்சட்ட ,அதே உருவம் ! 

  மூச்சுவிடாமல் பேசினார் "ரேவதி" அக்கா ! , சீர்காழியில் ஒரே வீட்டில் வசித்தோம். இங்கே வாக்கப்பட்டு வந்துள்ளார். வலுக்கட்டாயமாய் சாப்பிட கூட்டிச்சென்று விட்டார். அதே பாசம் !

  எதிர்பாரா சந்திப்பு , அருமையான தருணங்கள் ...

 பிரியா விடைப் பெற்று , ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு . மீண்டும் பஸ் ஏறி மத்திய பேருந்து நிலையம் அடைந்தேன்.

   "ஜே.ஜே" வ கூட்டிகிட்டு இன்னொரு தடவ வரணும் , அவளோட மாமா  வீடு கூட இருக்கே ! முடிஞ்சா  எல்லாருமா வருவோம் என்று நினைத்தபடியே "லொட லொடா" வண்டியில் ஏறி,  கண்ணில் நீர் வழிய ( இன்பக்கண்ணீர் ) வந்தேன்.

 மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டேன். அனைவரிடமும் பயண விபரத்தை விரித்து கூறிவிட்டு , குளித்து , சாப்பிட்டுவிட்டு ,அலுவலகம் புறப்பட்டு விட்டேன் ... உற்சாகத்துடன் !


  அறிஞர் அண்ணா கூறியதைப்போல "ஓய்வு" என்பது  மனம் சார்ந்தது தானோ ?




                                                       ______ சா.ரா _______ 
                                                                  

                                                                         









 

































































6 comments:

  1. Thank you for your motivation dear :)

    ReplyDelete
  2. Sir, nice story, just now I read, creative writing

    ReplyDelete
  3. Not only you,We are also travelling along with the story..

    ReplyDelete
    Replies
    1. Thank you Selvan :) . this story was inspired by our OFB Exam journey :)

      Delete