திரைக்கடலோடி
நெடு நீலக்கடல் , தீரா உலா , சுளீர்க்காற்று , கடும் நிபந்தனைகள், விசித்திரவாடைகள் , நிகரற்ற எண்ணில் அடங்கா அனுபவங்கள் இவையாவும் நேற்றுடன் நிறைவுற்றது .
நான் பாரி இந்திய கடற்படை லட்.கமாண்டர் - ஓய்வுபெற்ற ...
மேத்தா சார் தான் கடற்படை தேர்வுபற்றி கூறி என்னை தயார் படுத்தினார் .
அப்பாவிற்கு என்னைப்பிரிய விருப்பமில்லை எனினும் என்னுடன் தேர்விற்கு வந்தார் , என்னுடைய 17 ஆம் வயதின் மத்தியில் தேர்வாணை கிடைத்தது. அம்மா " எனக்கும் உன்ன அனுப்ப மனசில்லடா கண்ணு , ஆனா சர்க்கார் உத்தியோகம் கிடைச்சுருக்கே ! உன்னோட வாழ்க நல்லாயிருக்கும் பா , நம்ம நிலைமை மாறிடும் தைரியமா சேரு ராஜா " என்று கூறி அனுப்பிவைத்தார் .
சேர்ந்த புதிதில் கடும் சலிப்பு ஏற்பட்டது , இடைவிடாப்பயிற்சி , கட்டளைகள் , பல்வேறு கட்டுப்பாடுகள் , புதுப்புது நபர்கள் , வெவ்வேறு பாஷைகள் , திக்கு தெரியா பாதைகள் .. 9 மாதங்கள் கப்பல் பயணம் , 3 மாதம் விடுப்பு !
முதல் மூன்று மாதத்தை கடத்துவதற்குள் வீட்டுநினைவுகள் வதைத்தன திடீரென அப்பா எதிரில் நிற்பது , அம்மா பூஜை செய்வது , தொலைவில் அஜய் தம்பி விளையாடுவது , இப்படி மாயைகள் தோன்றி ஏங்க விடும், தற்போது உள்ளதுபோல் தகவல் தொழில்நுட்பம் பெருமளவு வளரவில்லை குத்துமதிப்பாக பேசுவது தான் ... இருந்திருந்தாலும் நடுக்கடலில் டவர் ஏது ?
இதுவே விடுப்பில் செல்லும்போதோ வீடே மிதப்பது போலவும் , மொட்டை மாடியிலிருந்து நடுக்கடல் தெரிவது போலவும் , மேலதிகாரி உரக்க கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்படும் .
பணியில் சலிப்போ , விரக்தியோ தோன்றும் சமயத்தில் மேத்தா அங்கிள் லேயே திட்டுவேன் .. அனால் உண்மையில் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
சில சமயங்கிளில் ஒவ்வாமை , காது வலி , கண் எரிச்சல் , தோல் தடித்தல் , பெரும் சவாலாகவே இருந்தது வருடங்கள் செல்லச்செல்ல வேலை மிகவும் பிடித்துபோனது .
எங்கள் குடும்ப நிலையே மாறத்துவங்கியது அஜய் நன்றாக படித்தான் , புள்ளியல் படிப்பில் சேர்ந்தான் , ஒருமுறை விடுப்பிற்கு வந்திருந்த சமயத்தில் ஒரு பெரிய வண்டியை பிடித்து எங்கள் சொந்தபந்தங்களை நிரப்பி " குல தெய்வம் " கோயிலுக்கு போறோம் என்று கூறி ஒரு மாடி வீட்டின் முன் நிறுத்தினார் அப்பா ! எனக்கு விஷயம் புரிந்து சிலம்ப , காபியுடன் வந்து நின்ற இந்திராவை பார்த்து சமத்தாக மாறி சம்மதித்தேன் .
இரண்டு மூன்று முறை என்னுடன் தங்கினாள் நீண்ட தேன் நிலவாக கழிந்தது அந்நாட்கள் . பிறகு ரேணு , முரளியுடன் ஒருமுறை அது கோடை விடுமுறையாய் ..
என்னுடைய வேலையை நன்கு புரிந்து , எங்கள் பெற்றோர் , குழந்தைகள் , வீட்டு நிர்வாகம் , என்சார்பில் விசேஷங்களுக்கு விட்டுகுடுக்காமல் செல்வது, போன்ற யாவையும் இல்லக் கேப்டனாக செய்தாள் .
அஜய்யின் திருமணத்தை முன்னின்று நடத்தினாள் , சிலவருடம் வேலைக்கு சென்றாள் பிறகு கணக்கு டியூஷன் , கிளாஸ் பெயின்டிங் , கைவினை வகுப்புகள் என ஓடிக்கொண்டே இருக்கிறாள் .. எந்த ஒரு சின்ன சலசலப்பையும் என்காதில் போடவே மாட்டாள் . முரளிக்கு விபத்து ஏற்பட்டது , ரேணுவின் காதல் கிளோபரங்கள் போன்றவற்றை நான் வரும்போதே அறிந்தேன் ..
எனக்கான நண்பர் பட்டாளம், நள்ளிரவு விருந்துகள் ,உற்சாக பானங்கள் , கேளிக்கிகள் , உலக சுற்றுலாத்துறை கூட அறிந்திராத அருமையான இடங்கள் , வரைபடங்கள் காணாத சிறு நகரங்கள், அழகிய தீவுகள் , மொழி - கண்ட எல்லைகளை கடந்த கலாச்சார பரிமாற்றங்கள் , திரைப்படங்கள் ...
வெளிநாட்டு அதிகாரிகளுடனான கூட்டுப்பயிற்சிகள் , எல்லைக்கடல் ரோந்துகள் , இருபெரும் தீவிபத்துகள் , கடற்கொள்ளையர் தாக்குதல்கள் , குடிதண்ணீரின்றி தவித்த தருணங்கள் , பல நுண் நுட்பங்கள் , சில உயரதிகாரிகளின் அடாவடிகள் , பல மேலதிகாரிகளின் ஊக்கம் , இவையெல்லாவற்றிற்கும் மேலாக நம் இந்திய தேசத்திற்கு பணியாற்றிய கவுரவம் , பாக்கியம் .
45 வயதில் ஓய்வு பெருகிறேனென்றால் இந்திரா ஏற்படுத்தி கொடுத்த பொருளாதார சுதந்திரமே .
எனக்கும் போதுமெனப்பட்டது , ரேணு கல்யாணமாகி கனடா போயாச்சு , முரளி நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டான் அம்மா , அப்பா , மாமனார் , மாமியார் முதலிய யாவரும் அதையே கூறி ஆமோதித்தனர் .
இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை , பிறகு அப்படியே இருக்க பிடிக்காமல் கச்சிதமான வேலை தேட துவங்கினேன் , ஸ்கூல் விட்டு வந்த விஷால் கப்பல் கத சொல்லுங்க பெரியப்பா என்று அன்பு தொல்லை புரிந்தான் , தாரா எனக்கும் அண்ணா என்று வந்து ஆவலாய் கேட்டாள் .. சில நேரம் கழிந்து வந்த அஜய் என்ன அண்ணே இன்னிக்கும் ஒரு கமாண்டர் கதையா ? என்று நக்கல் அடித்துவிட்டு " இவங்களைவிட இந்த கத கடல்சார் கல்லூரி மாணவர்களுக்கு ரொம்ப அவசியம் , நா அங்க இருக்குற பிரின்ஸிபால்ட பேசிட்டேன் , நீங்க எப்போ வேணா சேந்துகோங்க " என்றான் .
நான் மிகவும் மகிழ்ந்து என்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் ஐ துவங்கிவிட்டேன் , பாட புத்தகத்தில் இல்லாத பல நுட்பமான விஷயங்களை தெளிவாக புரியாவைப்பதாக பாராட்டுக்கள் வருகிறது .
சா.ரா